சாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டு உதை பட்டு உயிரிழந்து போயிருக்கின்றனர். ஒரு பிரபலமான சாமியார் சென்ற காரினால் கிளறப்பட்ட புழுதியை சேகரிக்க சென்றதனால் இந்த மாபெரும் அவலம் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்பாட்டாளர்களின் மெத்தனமும், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததும் இந்த அவலத்திற்கு மேலும் பங்களித்தன. போலே பாபா என்று அழைக்கப்படும் நாராயண் சாகர் ஹரி (எ) சூரஜ் பால் நேற்று உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு
அவரது சொற்பொழிவு நடந்த இடத்தில் இந்த அவலமான சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், போலே பாபாவின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. FIR இன் படி, அந்த சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடுவர் என்று கூறி அனுமதி கோரி இருக்கின்றனர். ஆனால் அவரது சொற்பொழிவிற்கு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருக்கின்றனர். மேலும், அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. கூட்டம் முடிந்து, அந்த சாமியார் வெளியேறும் போது, அவரது காரின் டயர் பாதையில் இருந்த மண்ணை சேகரிக்க அவரது சீடர்கள் மத்தியில் போட்டி ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர்.