தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது
தமிழகத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளி பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஜவுளி பூங்காவானது தமிழகத்தின் விருதுநகர் இ.குமாரலிங்கபுரம் மாவட்டத்தில் அமையவுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர், இந்தியாவின் முதல் ஜவுளிபூங்கா தமிழகத்தில் அதுவும் விருதுநகரில் அமையவுள்ளது. ஜவுளி வர்த்தகம் மிக முக்கியமானது. இதன்மூலம் தமிழகம் தொழில்துறையில் உலகளவில் கவனத்தினை ஈர்த்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழிலாக நெசவுதொழில் திகழ்ந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் இந்த பூங்காவில் தொழில் துவங்க 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் துணிநூல் துறையும் என மொத்தம் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், இந்த மெகா ஜவுளி பூங்காவை பெறுவதற்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. தமிழக அரசின் சிறப்பான பணி காரணமாக முதல் ஜவுளி பூங்காவினை தமிழகம் பெற்றுள்ளது என்று கூறினார். தொடர்ந்து அவர், விவசாயத்துக்கு அடுத்தபடியாக 4 கோடி பேருக்கு நேரடியாகவும், 6 கோடி பேருக்கு மறைமுகமாகவும் ஜவுளித்துறை வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.