சட்டம் பேசுவோம்: பதினாறா? பதினெட்டா? ஒப்புதலுக்கான வயதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். MeTooவுக்குப் பிறகு, பாலியல் உறவுகளில் ஒப்புதல் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பும், ஒப்புதல் என்பது மிக முக்கியமான விஷயம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஒப்புதல் என்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் ஒன்று ஒப்புதலுக்கான வயது. இந்தியாவில் ஒப்புதலுக்கான வயதை 18இல் இருந்து 16ஆக குறைக்க வேண்டும் என்ற விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஒப்புதலுக்கான வயது குறித்து இன்று விரிவாக பார்க்கலாம்.
ஒப்புதலுக்கான வயது என்றால் என்ன?
தற்போதுள்ள சட்டத்தின்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள பதின் பருவ பெண்களுடன் உறவு கொள்வது தவறாகும். அந்த பெண்ணின் ஒப்புதலுடன் ஒரு பதின் பருவ ஆண் உறவு கொண்டாலும் அந்த வழக்கு பலாத்காரமாக தான் கருதப்படும். இந்தியாவில், POCSO சட்டத்தின் கீழ், இரு தரப்பினருக்கும் இடையே ஒப்புதல் இருந்தாலும் கூட, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இடையில் நடக்கும் அனைத்து பாலியல் செயல்பாடுகளும் குற்றமாக கருதப்படுகிறது. நவம்பர் 2012 வரை, ஒப்புதலுக்கான வயது 16 ஆக இருந்தது. POCSO சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு தான் ஒப்புதலுக்கான வயது 18 ஆக உயர்த்தப்பட்டது. 18 வயதுக்குக் குறைவான பெண்ணின் சம்மதம் இருந்தாலும் இல்லையென்றாலும் அந்த பெண்ணுடன் உறவு வைத்து கொள்வது பலாத்காரம் என்று சட்டம் கூறுகிறது.
சட்ட ஆர்வலர்கள் ஏன் ஒப்புதலுக்கான வயதை குறைக்க சொல்கிறார்கள்?
18 வயதிற்குட்பட்டவர்கள் ஒப்புதல் அளிக்க இயலாதவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதனால், 16 வயதுக்கு மேற்பட்ட இருவர் ஒப்புதலுடன் உடலுறவு கொண்டாலும், அது பலாத்காரமாக கருதப்பட்டு, அந்த உறவில் இருக்கும் ஆணுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. எனவே, சட்ட ஆர்வலர்கள் ஒப்புதலுக்கான வயதை 16ஆக குறைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம், இந்த விஷயம் குறித்து கவலை தெரிவித்திருந்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், இளம் பருவத்தினர் சம்மந்தப்பட்ட பாலுறவு வழக்குகளை நீதிபதிகள் விசாரிப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும், ஒப்புதலுக்கான வயதை மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்திடம் அவர் முறையிட்டார்.
ரோமியோ ஜூலியட் சட்டம்: ஒரு பார்வை
இதற்கிடையில், சமீபத்தில், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரஸ்பர ஒப்புதலுடன் உடலுறவு கொள்வதை குற்றமற்றதாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அபாயங்களைப் புரிந்து, முடிவுகளை எடுப்பதற்கான திறன் பதின் பருவத்தினருக்கு இருக்கிறது என்று இந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் பதிலைக் கோரியது. இந்தியாவில் "ரோமியோ ஜூலியட் சட்டத்தை' அறிமுகப்படுத்துவதன் சாத்தியக்கூறு குறித்தும் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் பதில் கோரி இருந்தது. பதின் பருவத்தினருக்கு இடையேயான வயது வித்யாசம் 4க்குள் இருந்தால், அவர்களின் உறவை அங்கீகரிக்கும் சட்டம் ரோமியோ ஜூலியட் சட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ஒப்புதலுக்கான வயதை குறைப்பது பதின்ம வயதினருக்குக் கேடு விளைவிக்காதா?
இல்லை என்கிறது தரவுகள். சட்ட ஆர்வலர்களும் அதை தான் கூறுகிறார்கள். ஒப்புதலுக்கான வயதைக் குறைக்காததன் மூலம், இந்தியா சமூக நடப்புகளை அறியாமல் இருக்கிறது என்று பலர் வாதிடுகின்றனர். பாலியல் துஷ்பிரயோகத்தில் மட்டும் கவனம் செலுத்தும் இந்தியா இளம் பருவத்தினருக்கு இடையேயான பாலுறவை மறந்துவிடுகிறது என்கின்றனர் சட்ட ஆர்வலர்கள். இந்தியாவில் உள்ள 39 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் 18 வயதிற்கு முன்பே உடலுறவு கொண்டுள்ளனர் என்கிறது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) தரவுகள். அதனால், தற்போதுள்ள இளம்பருவத்தினர் அதிகமாக பாலுறவு வைத்துக்கொள்கின்றனர் என்கிறது அரசாங்க தரவுகள். மேலும், சிறுமிகளின் பாலுணர்வைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் குற்றவியல் நீதி முறையைப் பயன்படுத்துகின்றனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.