திருப்பத்தூரில் கண்டெடுக்கப்பட்ட 17ம் நூற்றாண்டின் நிலக்கொடை கல்வெட்டு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ்துறை ஆய்வுக்குழுவில் உள்ளோர் கள ஆய்வுகள் மூலம் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணில் அடங்கா பல வரலாற்று தடையங்களை கண்டறிந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தமானது கோவையிலுள்ள 'யாக்கை' அறக்கட்டளையுடன் கையெழுத்தானது என தெரிகிறது.
அதனை தொடர்ந்து, திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி தமிழ் துறை ஆய்வு குழுவினர் மற்றும் சமூக ஆர்வலரான ராதா கிருஷ்ணன் அளித்துள்ள தகவல்படி திருப்பத்தூரினை அடுத்துள்ள சோமலாபுரம் அருகேயுள்ள விவசாய நிலத்தில் ஒரு கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'யாக்கை' அறக்கட்டளை குழுவினருடன் இணைந்து நடத்திய களஆய்வின் முயற்சியில் இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது என்று தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்துறை ஆய்வுக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கல்வெட்டு
எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தை சேர்ந்தது என கண்டறிய இயலவில்லை
இதனைத்தொடர்ந்து தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஐந்தரை அடி நீளம், மூன்றரை அடி அகலம் கொண்ட பலகை கல்லில் வடிக்கப்பட்டுள்ளது என்று ஆராயப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இதில் 17 வரிகள் எழுதப்பட்டுள்ளது.
அந்த வரிகள் அனைத்தும் தமிழ், வடமொழி, கிரந்து உள்ளிட்டவற்றை கலந்து எழுதப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதனிடையே இக்கல்வெட்டானது திறந்தவெளியில் பல காலங்களாக எவ்வித பாதுகாப்புமின்றி இருந்த காரணத்தினால் அதிலிருந்த எழுத்துக்கள் உராய்வு ஏற்பட்டு மங்கலாக காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த கல்வெட்டில் மாவுப்பூச்சு பூசப்பட்டு,படி எடுக்கப்பட்டு அதன்பின்னர் ஆய்வுக்குழுவினரால் படிக்கப்பட்டது.
எனினும் கல்வெட்டு தெளிவாக இல்லாததால் எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில் இது பொறிக்கப்பட்டது என்னும் விவரம் கண்டறிய முடியவில்லை.
ஆனால் எழுத்துக்களின் அமைப்புகள் கொண்டு இந்த கல்வெட்டு 17ம்-நூற்றாண்டினை சேர்ந்தது என்பது தெளிவாகிறது.