ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன?
கடந்த மூன்று மாதங்களில், மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பார் சிவில் மருத்துவமனையில் 179 குழந்தைகள் இறந்துள்ளன. குறைவான எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல காரணிகளால் அந்த குழந்தைகள் உயிரிழந்ததாக நந்தூர்பாரின் தலைமை மருத்துவ அதிகாரி, எம் சவான் குமார் காரணம் காட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பழங்குடியின மக்கள்தொகைக்கு பெயர் பெற்றதாகும். இந்த மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளில் 70 சதவீதம் குழந்தைகள் பிறந்து 0-28 நாட்களுக்குள்ளேயே உயிரிழந்துள்ளன என்பது குறிப்பாகக் குறிப்பிட வேண்டிய விஷயமாகும். மகாராஷ்டிராவிலேயே அதிக ஊட்டச்சத்து குறைபாடு விகிதத்தை கொண்ட மாவட்டமும் இது தான்.
போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு
குறைப்பிரசவம், குறைவான எடை, பாம்புக்கடி, பிரசவத்தின் போது ஏற்படும் செப்சிஸ், நிமோனியா மற்றும் விபத்துக்கள் போன்ற எண்ணற்ற காரணங்களால் இந்த பகுதியில் குழந்தை இறப்பு அதிகரித்து வருகிறது. சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பு இல்லாதது, வெகுஜன இடம்பெயர்வு மற்றும் வீட்டுப் பிரசவங்கள் போன்றவை இதில் 20 சதவீத உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது என்று எம் சவான் குமார் கூறியுள்ளார். ஜூலை மாதத்தில், இந்த மருத்துவமனையில் 75 குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன. இது ஆகஸ்ட் மாதத்தில் 86 ஆக அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. உள்ளூர் எம்எல்ஏ அம்சா பத்வி, போதிய வசதிகள் இல்லாததால், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.