அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தெற்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் இமயமலை தொடரில் 3,880மீ.,உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக்கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாக உருவாகும் லிங்கத்தினை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஜூலை 1ம்தேதி துவங்கிய இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 31ம்தேதியோடு நிறைவடைகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மாநிலத்திலிருந்து அமர்நாத் புனித யாத்திரையினை மேற்கொண்டு திரும்புகையில் வழியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக ஸ்ரீநகருக்கு செல்லும் பாதையானது முற்றிலும் சேதமடைந்த காரணத்தினால் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவ்வாறு அங்கு சிக்கித்தவித்த முருகானந்தம், செல்வி, செல்லப்பாண்டி, செந்தில் குமார், ராஜாங்கம், கீதா, சங்கர், கலைவாணி, சாவித்திரி, சந்திரசேகரன், அமுதா, ராஜேஷ்குமாரி, ராகினி, உள்ளிட்ட 17 நபர்களின் விவரமானது தமிழகஅரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்
அதன்பின்னர், தமிழக முதல்வர் அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டதாக தெரிகிறது. அதன் பேரில் அங்கு சிக்கி தவித்த 17 பேரும் பத்திரமாக அங்கிருந்து மீட்கப்பட்டு புதுடெல்லியில் உள்ள தமிழர் இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கடந்த 13ம் தேதியன்று தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்களுக்கு பயணசீட்டுக்கள் கொடுக்கப்பட்டு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்த அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரான மஸ்தான் மற்றும் அரசு அலுவலர்கள் வரவேற்று அவர்களது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.