150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம்
இந்தியாவில் உள்ள 150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லாத, விதிகளை கடைபிடிக்காத 150 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையம் என்பது நாட்டின் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பாகும். ஏற்கனவே, நாடு முழுவதும் உள்ள 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்துவிட்டன. அவை நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பின்பற்றுகின்றன என்பதை NMCயிடம் நிரூபித்தால் மட்டுமே அந்த கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்படும். புதுச்சேரி, தமிழ்நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்துவிட்டன.
மருத்துவக் கல்லூரிகள் 30 நாட்களுக்குள் NMCஇல் மேல்முறையீடு செய்யலாம்
தமிழகத்தில் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உட்பட 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பட்டியல்களில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தததை அடுத்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவ ஆணையத்தின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் போது குறைபாடுகள் வெளிப்பட்டன. மருத்துவக் கல்லூரிகள் 30 நாட்களுக்குள் NMCஇல் மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால், அவர்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தை அணுகலாம். டிசம்பரில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, விதிகளை கடைபிடிக்காத அல்லது சரியான ஆசிரியர்களை நியமிக்காத மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.