அமளிதுமளியான நாடாளுமன்றம்; மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட்
திங்கட்கிழமை (டிசம்பர் 18) ஒரே நாளில் 79 எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை சுமார் 50 உறுப்பினர்கள் அதே நடவடிக்கையை எதிர்கொண்டனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. இது நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாகும். செவ்வாய்க்கிழமை அவையில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், கார்த்தி சிதம்பரம், என்சிபியின் சுப்ரியா சுலே, சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
எம்பிக்கள் இடைநீக்கம் ஏன்?
கடந்த வாரம் மக்களவையில் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போராட்டம் நடத்தினர். இந்த பாதுகாப்பு தோல்வி குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், மக்களவை சபாநாயகர், சபையில் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு சம்பவமும் செயலகத்தின் வரம்புக்கு உட்பட்டது என்றும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று கூறிவிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும், இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றாலும், பாராளுமன்றத்தில் விவாதம் தேவையில்லை எனக் கூறியுள்ளார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவையை முடக்குவதால் இடைநீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.