பாஜக ஐ.டி. பிரிவினர் கட்சியில் இருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல் - அதிமுகவில் இணைந்தனர்
பாஜக.,கட்சியினை சேர்ந்த தொழில்நுட்பப்பிரிவு மாநில தலைவரான சிடி.ஆர்.நிர்மல்குமார் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்து, பாஜகவில் தான் வகித்த பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்பின்னர், சென்னை அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுக கட்சியில் இணைந்து கொண்டார். இதுபெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், அவரையடுத்து பாஜக தொழில்நுட்பப்பிரிவு மாநில செயலாளர் திலீப்கண்ணனும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அங்கிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, தகவல் தொழில்நுட்பப்பிரிவு சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஒரத்தி.அன்பரசு தலைமையில் 2 மாவட்ட துணை தலைவர்கள், 10 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் நேற்று(மார்ச்.,8)மொத்தமாக தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி ராஜினாமா செய்துள்ளார்கள்.
நிச்சயம் திமுக'வில் இணையமாட்டேன் - ஒரத்தி.அன்பரசு
இதுகுறித்து சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டத்தலைவர் ஒரத்தி.அன்பரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக்கொள்ளும் பரிகாரம். ஆகவே ராஜினாமா செய்கிறேன் என்றும், நிச்சயம் திமுக'வில் இணையமாட்டேன். என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்பவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிடி.ஆர்.நிர்மல்குமாரின் அரசியல் பாதையில் பயணிக்க முடிவுசெய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, அவர்கள் 13 பேரும் அதிமுக'வில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர், சென்னை மேற்குமாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.கே.சரவணன், ஸ்ரீராம் ஆகியோர் கட்சியிலிருந்து விலகவில்லை என்றும், 10 மாவட்ட செயலாளர்கள் விலகியதாக கூறும் தகவலும் தவறு. அவர்கள் மாவட்ட செயலாளர்களே இல்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.