பேச்சுவார்த்தையை துவங்க கோரிக்கை: பிரதமர் மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப்புக்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்
செய்தி முன்னோட்டம்
இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிறைவடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பொது பிரமுகர்கள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டக் கோரி கூட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற பேச்சுவார்த்தை மற்றும் இயல்பான இருதரப்பு உறவுகளை மீட்டெடுக்கக் கூட்டு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு அவர்கள் அவசர கடிதம் எழுதியுள்ளனர்.
அறிக்கை
117 முக்கிய பிரமுகர்கள் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கை
Centre for Peace and Progress என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த அமைதி அறிக்கையில் இந்தியாவை சேர்ந்த 61 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 56 பேரும் என மொத்தம் 117 முக்கியப் பிரமுகர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவின் தரப்பில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பிரிவினைவாதத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக், பிடிபி தலைவர் மெகபூபா முஃப்தி, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா மற்றும் ஏஜேயுபி தலைவர் ஹுமாயூன் கபீர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி, அணுசக்தி விஞ்ஞானி பெர்வேஸ் ஹூத்பாய் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
முழுமையான தூதரக உறவுகளை மீட்டெடுக்கக் கோரிக்கை
நீண்டகால பகைமை காரணமாக இரு நாடுகளிலும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலமும், பொருளாதார வாய்ப்புகளும் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, புதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இரு நாடுகளின் தலைநகரங்களிலும் உயர் தூதர்களை மீண்டும் நியமிக்க வேண்டும், முழுமையான விசா சேவைகளைத் தொடங்க வேண்டும் மற்றும் வணிக விமானங்களுக்கான வான்வெளியை இரு நாடுகளும் பரஸ்பரம் திறந்துவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வர்த்தகம்
வர்த்தக பாதைகளைத் திறக்க வலியுறுத்தல்
இதுமட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையேயான அத்தாரி-வாகா நில எல்லை வழியான வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும், ஸ்ரீநகர் - முசாஃபராபாத் பேருந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும் மற்றும் கர்தார்பூர் சாஹிப் காரிடார், பாகிஸ்தானின் நீலம் பள்ளத்தாக்கில் உள்ள சாரதா பீடத்திற்கான ஆன்மீக பயணங்களை எளிதாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகப் பயணிக்க முடியாது" என்ற இந்தியாவின் அதிகாரப்பூர்வ வெளியுறவு கொள்கை நிலுவையில் உள்ள நிலையில், தெற்காசியாவின் அமைதிக்காக இந்த அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.