துப்புரவு பெண் தொழிலாளர்கள் வாங்கிய ரூ.250 லாட்டரி சீட்டுக்கு, ரூ.10 கோடி பரிசு!
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடையுள்ள நிலையில், கேரளா, பஞ்சாப், அசாம், சிக்கிம், போன்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் உள்ளது. இந்நிலையில் கேரளா-மலப்புரம் மாவட்டத்தினை சேர்ந்த ஹரிதா கர்மா சேனா என்னும் குழுவினை சேர்ந்த துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் 11 பெண்கள் இணைந்து, லாட்டரி சீட்டு ஒன்றினை வாங்க முடிவுச்செய்துள்ளனர். அதன்படி ரூ.250 மதிப்புள்ள லாட்டரி சீட்டினை வாங்க இவர்கள் கூட்டாக காசினை சேகரித்துள்ளனர். அப்போது ரூ.12.50குறைந்த நிலையில் இவர்கள் 11வது நபராக ஒரு பெண்ணை சேர்த்து டிக்கெட்டினை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, 9 பேர் தலா ரூ.25 கொடுத்த நிலையில், மற்ற இருவர் ரூ.12 போட்டு வாங்கிய லாட்டரிச்சீட்டில் தற்போது அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது.
பரிசுத்தொகை கிடைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி - துப்புரவு ஊழியர்கள்
இது குறித்து பரிசு வென்ற பெண்களுள் ஒருவர் கூறுகையில், "இதுவரை 4 முறை இதுபோல் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளோம். ஆனால் பரிசு எதுவும் விழவில்லை" என்று கூறியுள்ளார். மேலும் மிகவும் பின்தங்கிய சூழலில் உள்ள தங்களுக்கு இந்த பரிசுத்தொகை கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். மழைக்கால பம்பர் பரிசு என்னும் டிக்கெட்டினை தான் இவர்கள் ரூ.250க்கு வாங்கியுள்ளார்கள் என்று தெரிகிறது. இந்த சீட்டிற்கு 2வது பரிசாக ரூ.10 லட்சம் , 3வது பரிசாக ரூ.5 லட்சம், 4வது பரிசாக ரூ.3 லட்சம் தலா 5 பேருக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.