11 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு
தமிழ்நாடு மாநிலத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் விண்ணப்பிக்காமல் தவற விட்டவர்களுக்கான மற்றுமொரு வாய்ப்பாக கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அது முடிவடைந்துள்ள நிலையில், இதுகுறித்த தகவலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள் தங்கள் மேல்முறையீடு மனுக்களை அளிக்க கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவுற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார். மேலும் அவர், 'அந்த மனுக்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் பரிசீலனை செய்து வருகிறார்கள்' என்றும் பதிவிட்டுள்ளார்.
பரிசீலனை செய்யப்படும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்
இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு மேல்முறையீடு செய்யப்படும் மனுக்களை பரிசீலனை செய்யும் பணிகளை நேரில் சென்று இன்று(அக்.,26)ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் பொழுது உதயநிதி ஸ்டாலின் விண்ணப்பித்திருந்த பெண்களுள் 3 பேரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதன்படி, அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை எடுத்துரைத்த பொழுது அதிலிருக்கும் நியாயத்தினை உணர்ந்து அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த ஒரு மகளிரின் விண்ணப்பம் கூட விடுபட்டுவிட கூடாது என்று அலுவலர்களை கேட்டுக்கொண்டதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.