நிலக்கரி பற்றாக்குறையால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தமிழ்நாடு மாநிலம் கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், நிலம் கையகப்படுத்த முடியாத நிலை பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடந்த ஒரு ஆண்டாக நிலவி வருகிறது. இதனையடுத்து தற்போது நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5 யூனிட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு 80 ஹெக்டர் நிலம் கிடைத்தால் போதும். நிலக்கரி உற்பத்தி மூலம் மின்சாரத்தினை சீராக உற்பத்தி செய்துவிட முடியும். 15 ஆண்டுகளுக்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பில்லை என்பதில் உண்மையில்லை
மேலும் அவர் பேசுகையில், என்.எல்.சி.நிறுவனத்தால் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.30காசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனை வெளிச்சந்தையில் வாங்கினால் ஒரு யூனிட்டிற்கு ரூ.10முதல் ரூ.12வரை வழங்கவேண்டியிருக்கும். இந்நிறுவனத்தால் புதிதாக 1,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இது முழுவதுமாக உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில், நிலம் கையப்படுத்தப்பட்டால் பற்றாக்குறைக்கான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியினை உடனடியாக ஈடு செய்திட முடியும் என்றும் கூறியுள்ளார். இந்நிறுவனத்தில் தற்போது 18 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இதில் ஒப்பந்த தொழிலாளர்களில் 95% பேர் தமிழர்கள். அதே போல் நிரந்தர தொழிலாளர்களின் 83% பேரும் தமிழர்கள் தான். தமிழர்களுக்கு என்.எல்.சி.யில் வேலைவாய்ப்பில்லை என்பதில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்