
மகளிர் உரிமைத்தொகைக்கு 1 கோடியே 6 லட்சம் பேர் தேர்வு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் செப்டம்பர் 15ம் தேதி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னதாக கூறியிருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் இந்த திட்டத்திற்கான செயல்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று(செப்.,11) இதுகுறித்து மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், "கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட துவக்கவிழா காஞ்சிபுரத்தில் வரும் 15ம் தேதி துவங்கவுள்ளது. அன்றைய தினமே மற்ற மாவட்டங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையில் துவங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மிகப்பெரிய திட்டம் என்றால் அது இதுதான் என்றும், இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என 1 கோடியே 6 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நிதி
ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
மேலும் பேசிய அவர், இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக்கணக்கில் இப்பணம் வரவு வைக்கப்படும்.
ஏடிஎம் கார்டுகள் விரைவில் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பயனாளிகள் பணம் எடுப்பதில் எவ்வித சிக்கலும் இருக்கக்கூடாது என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தேர்வு பெறாத விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான காரணம் மொபைல் போனில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தும்படி கேட்டுக்கொள்வதாகவும் முதல்வர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.