விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும், விஜய் சேதுபதியின் 'மகாராஜா'-வும்! என்ன தொடர்பு?
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றியை கண்ட திரைப்படம் 'மஹாராஜா'. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது 'மகாராஜா'. இப்படம் விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படம் என்பது கூடுதல் சுவாரசியம். படத்தின் திரைக்கதை பற்றி பலரும் பாராட்டி வரும் நிலையில், உலக புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நிர்வாகமும் இப்படத்தினால் ஈர்க்கப்பட்டு, நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், 'மகாராஜா' விஜய் சேதுபதியின் போஸில் அமர்த்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
'மகாராஜா' ஜோகோவிச்
போராடி வரும் தமிழ் திரையுலகம்
சமீப காலமாக வெளிமாநில படங்கள் படையெடுத்து வந்த நிலையில், தமிழ் சினிமாவில் தரமான கதைக்களம் கொண்ட படங்கள் வெளியாகாத காரணத்தால், பல பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன. சமீபத்தில் வெளியான சூரியின் கருடன், விஜய் சேதுபதியின் 'மகாராஜா' இந்த ஆண்டு தொடக்கம் முதல் வெற்றி காண போராடி வரும் தமிழ் திரையுலகிற்கு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 100 கோடியைத் தாண்டிய இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக 'மகாராஜா' உள்ளது. வர்த்தக இணையதளமான sacnilk இன் அறிக்கையின்படி , இப்படம் இந்தியாவில் சுமார் 76 கோடி ரூபாயையும், வெளிநாடுகளில் சுமார் 24 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது.