ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் குமுறல்; நடந்தது என்ன?
சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் விதமாக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை தொடங்கி, உலகம் முழுவதும் இசைநிகழ்ச்சி நடத்த திட்டம் வைத்திருந்தார். ஆனால், ஆகஸ்ட் மாதம் எதிர்பாராத விதமாக மழை பெய்யவே, அந்த நிகழ்ச்சி, நேற்று, (செப்டம்பர்-10) ஒத்திவைக்கப்பட்டது. சென்னையின் ECR-ல் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பிளாட்டினம், டைமண்ட், கோல்ட் என பலவித டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் விலை, ரூ.2000-ரூ.15000 வரை நிர்ணையிக்கப்பட்டிருந்தது. தனியார் தளத்தில் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விலையை பற்றி கவலைப்படாமல், இசைநிகழ்ச்சியை நேரில் காண வேண்டுமென ஆவலோடு நேற்று வந்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.
கூட்டநெரிசலில் சிக்கி தவித்த பொதுமக்கள்
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தெரிவித்த கருத்துப்படி, நிகழ்ச்சிக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகளை தாண்டி, பலர் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டிக்கெட் இருந்தும், அமர இடம் இல்லாத சூழல் ஏற்பட்டது. அதோடு, அதிக கூட்டம் கூடியதால், டிக்கெட் வைத்திருந்த பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர். கார் பார்க்கிங் வசதியும் சரியாக இல்லாத காரணத்தால், பொதுமக்கள் கிட்டத்தட்ட 1.5 கிமீ தூரம் நடக்க வேண்டிய சூழல் இருந்ததாக கண்டனம் தெரிவித்தனர். ஆகஸ்ட் மாதம் மழை பொழிந்து, நிகழ்ச்சி ரத்தானதற்கு கண்டனம் தெரிவித்த ரஹ்மான், இந்த மோசமான நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு மௌனம் காப்பது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஹ்மான் பெயரை வைத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், தங்களை மோசம் செய்துவிட்டதாக குமுறுகின்றனர் ரசிகர்கள்.