நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்; மணப்பெண் குறித்து வெளியான தகவல்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமானவர் கவின். தொடர்ந்து 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து வந்தாலும், அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதோடு, பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார். இதனை தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவருடன் சாண்டி மாஸ்டர், முகின், தர்ஷன் என பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி தற்போது வரை பலராலும் ரசிக்கப்பட்ட ஒரு சீசன் என்றால் அது மிகையாகாது. அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, இலங்கையை சேர்ந்த லாஸ்லியா என்ற போட்டியாளரை கவின் விரும்புவதாக, பிக் பாஸ் வீட்டினுள் இருக்கும் போது கூறினார். இதற்காக அவர், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பாதி போட்டியிலிருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் கவினுக்கு திருமணம்?
ஆனால் அவர் காதலுக்கு, லாஸ்லியாவின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பது போட்டியின் போதே தெரியவந்தது. இதனை அடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வெளியே வந்த இருவரும், தத்தமது சினிமா கேரியரில் கவனம் செலுத்த துவங்கினர். 'கூகிள் கட்டப்பா' என்ற படத்தின் மூலம் லாஸ்லியா தனது திரை வாழ்க்கையை துவங்கினார். மறுபுறம், கவின், லிஃப்ட், டாடா என படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இது மட்டுமின்றி மேலும் இரு படங்கள் அவர் கைவசம் இருப்பதாக தெரிகிறது. தற்போது அவருக்கு திருமணம் செய்ய அவரது வீட்டில் முடிவெடுத்திருப்பதாகவும், மணப்பெண் அவரது தாய் தேர்வு செய்த பெண் எனவும் கூறப்படுகிறது. இம்மாத இறுதியில் அவருக்கு திருமணம் நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது.