ஜெயிலர் 2 பார்க்கும் முன் டாக்டர், ஜெயிலர் படங்களை பாருங்கள்: இயக்குநர் நெல்சன் வேண்டுகோள்
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழலில், படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக வளர்ந்த தனக்கு, அவரை வைத்து திரைப்படம் இயக்குவது கனவு போன்றதொரு அனுபவம் என்றும், ரசிகர்கள் ஜெயிலர் 2 உலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு தனது முந்தைய வெற்றிப் படங்களான டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களை ஒருமுறை பார்த்துவிட்டு வருமாறும் அவர் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 மாத உழைப்பு
ரத்தமும் வியர்வையும் சிந்தி எடுத்த படம்
தனது உணர்வுப்பூர்வமான பதிவில் குறிப்பிட்டுள்ள நெல்சன், "எனது சினிமா வாழ்க்கையில் ஒரு படம் வெளியாவதற்கு முன்பு இவ்வளவு நெகிழ்ச்சியாக உணர்வது இதுவே முதல் முறை".
"சிறுவயதில் இருந்தே நான் அதிகம் நேசித்தது நம் தலைவரைத்தான். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்த படத்தை இயக்கியிருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி".
"கடந்த 18 மாதங்களாக ஜெயிலர் 2 பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டு வந்தோம். உங்களை மகிழ்விக்கவும், நமது தேசத்தின் பெருமையான ஒரே ஒரு மனிதரான தலைவரைக் கொண்டாடவும் எங்கள் படக்குழுவினர் அத்தனை பேரும் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
ரசிகனின் பரிசு
டாக்டர் படத்துடனான தொடர்பு என்ன?
மேலும் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துப் பேசிய அவர், "உங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை மாபெரும் கௌரவமாகக் கருதுகிறேன்".
"ஒரு தீவிர ரசிகனிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் அன்புப் பரிசுதான் இந்தத் திரைப்படம். இந்தத் தருணங்களை நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்".
"இன்னும் சில மணி நேரங்களில் ஜெயிலர் 2 உங்கள் கைகளில் சேரப்போகிறது. திரையரங்குகளில் இது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் என நம்புகிறேன்".
"ஆனால் படத்திற்குள் செல்வதற்கு முன் டாக்டர் மற்றும் ஜெயிலர் படங்களைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்" எனக் கூறியுள்ளார்.
நெல்சனின் இந்த திடீர் அறிவுரை, டாக்டர் படத்திற்கும் ஜெயிலர் 2 கதைக்களத்திற்கும் ஏதேனும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடர்பு இருக்குமோ என்ற மிகப்பெரிய ஆவலையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் பற்றவைத்துள்ளது.
embed
Twitter Post
Do Visit #Doctor and #Jailer before getting into the world of #Jailer2 🔥 #Thalaiva Nation pic.twitter.com/gEUWFlpVSA— Rahul AK (@Akularahul17) October 14, 2026