விஜய்யின் ஜன நாயகன் ட்ரைலர் ஜனவரி 3ஆம் தேதி மாலை வெளியாகிறது!
செய்தி முன்னோட்டம்
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தைப் புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, 'ஜன நாயகன்' படத்தின் ட்ரைலர் வரும் ஜனவரி 3-ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு சமூக வலைதளங்களில் வெளியாகிறது. புத்தாண்டை முன்னிட்டு, இது சம்மந்தமாக விஜய் பகிர்ந்துள்ள புதிய போஸ்டரில், கருப்பு நிற சட்டையில் கையில் துப்பாக்கியுடன் மிகவும் ஸ்டைலாகக் காட்சியளிக்கிறார். இந்தப் போஸ்டரில் வில்லனாக நடிக்கும் பாபி தியோலின் பிம்பமும் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் திரைப்பயணத்தில் இது 69-வது மற்றும் கடைசிப் படமாகும். இந்தப் படத்திற்கு பிறகு அவர் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விவரங்கள்
ஜன நாயகன் படத்தின் விவரங்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத் ரவிச்சந்தர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது. இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் 'ஜன நாயகடு' (Jana Nayakadu) என்றும், ஹிந்தியில் 'ஜன நேதா' (Jana Neta) என்றும் வெளியாகிறது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்த படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் 'கவுண்ட்டவுன்' தொடங்கிவிட்டனர்.