'ஜன நாயகன்' தாமதத்திற்குப் பின்னால் அரசியல் சதி: இயக்குநர் அமீர் விளாசல்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' வெளியாவதில் நீடித்து வரும் சிக்கல்கள் குறித்து பிரபல இயக்குநர் அமீர் சுல்தான் அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தணிக்கை வாரியத்தின் (CBFC) நடவடிக்கைகளில் தெளிவற்ற அரசியலும், உள்நோக்கமும் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், "வழக்கமாக ஒரு படத்திற்குத் தடை விதிக்கப்படும்போது வன்முறை அல்லது சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான காட்சிகள் போன்ற காரணங்களைச் சென்சார் போர்டு குறிப்பிடும். ஆனால், 'ஜன நாயகன்' விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வரை சென்று முடிவெடுக்க வேண்டும் என்று கூறுவது இதுவே முதல்முறை. இதில் மறைமுகமாகப் பெரிய அரசியல் விளையாட்டு நடப்பதாகவே தெரிகிறது," என்று குறிப்பிட்டார்.
எதிர்பார்ப்பு
படத்தின் நிலையும், ரசிகர்கள் எதிர்பார்ப்பும்
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான 'ஜன நாயகன்', விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தேர்தல் வருகைக்கு முன்னதாக, ஜனவரி 9, 2026 அன்று வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கைச் சிக்கல்களால் படம் நிறுத்தி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி மறுஆய்வுக் குழுவினர் படத்தைப் பார்த்துள்ளனர். விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் வெளியாகும் கடைசிப் படம் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. படத்தின் தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களுக்கு உடன்பட்டுள்ள நிலையில், சென்சார் போர்டின் இறுதித் தீர்ப்புக்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் காத்திருக்கிறது.