ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்! தணிக்கைக்குழு சிக்கலில் விஜயின் ஜனநாயகன்; கடைசி நிமிடத்தில் ரத்தான திரையிடல்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடித்து, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழு திரையிடல் இன்று (மார்ச் 9) ரத்து செய்யப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. திட்டமிட்டபடி இன்று மதியம் 2 மணிக்கு ஜனநாயகன் திரைப்படம் மறுஆய்வுக் குழுவினருக்குத் திரையிடப்பட வேண்டியிருந்தது. ஆனால், குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இந்தத் திரையிடல் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், மார்ச் 19ஆம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப் போராட்டம்
தொடரும் சட்டப் போராட்டங்கள்
ஜனவரி 9 ஆம் தேதியே வெளியாக வேண்டிய இந்த திரைப்படம், சிபிஎஃப்சி உடனான மோதல் காரணமாகத் தள்ளிப்போனது. படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தனி நீதிபதி படத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தாலும், சிபிஎஃப்சி மேல்முறையீடு செய்ததால் தற்போது தடையுத்தரவு அமலில் உள்ளது. சமீபத்தில் ஐயாசாமிபட்டியில் நடந்த தனது கட்சியின் (தவெக) நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், தனது கரூர் மாநாட்டிற்குப் பிறகு ஜனநாயகன் படத்திற்குப் பல முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.