
பிப்ரவரியில் திருமணம்? விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகத் தகவல்
செய்தி முன்னோட்டம்
பிரபல நடிகர்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்குச் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இருவரும் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றன. இந்த நிச்சயதார்த்தம் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நடந்ததாகவும், இதில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் என குறிப்பிடப்பட்டே வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு நடிகர்கள் தரப்பில் இருந்தும் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மூலமாகவோ இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
காதல்
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதல்
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கடந்த சில ஆண்டுகளாகவே காதலில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய இரண்டு வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். சமீபத்திய ஊடகச் செய்திகளின்படி, இயக்குநர் ராகுல் சான்கிருத்தியன் இயக்கவுள்ள VD14 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் இந்த ஜோடி மூன்றாவது முறையாகத் திரையில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த நிச்சயதார்த்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.