"நடிகர் விஜயால் சுடப்பட்ட 13வது ஆள் நான்தான்"! இயக்குநர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்! பின்னணி இதுதான்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமா இயக்குநரான விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஐகே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்திற்கான விளம்பரப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவரிடம், அவரது அறிமுகத் திரைப்படமான 'போடா போடி' (2012) எதிர்பார்த்த வெற்றியைப் பெறாதது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விக்னேஷ் சிவன், நடிகர் விஜயால் சுடப்பட்டவர்களில் தானும் ஒருவன் என்று நகைச்சுவையாகவும் அதே சமயம் எதார்த்தமாகவும் பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2012 மோதல்
துப்பாக்கி vs போடா போடி
விக்னேஷ் சிவன் போடா போடி படத்தின் இயக்குநராக ஒப்பந்தமானபோது அவருக்கு வயது 22. ஆனால், பல தாமதங்களுக்குப் பிறகு அந்தப் படம் வெளியாகும்போது அவருக்கு 27 வயதாகிவிட்டது. சுமார் 5 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு வெளியான அந்தத் திரைப்படம், நடிகர் விஜயின் மெகா ஹிட் திரைப்படமான துப்பாக்கியுடன் நேரடியாக மோதியது. துப்பாக்கி படத்தின் அந்த மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு முன்னால், போடா போடி திரைப்படத்தால் நிலைத்து நிற்க முடியவில்லை என்று விக்னேஷ் சிவன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு பெரிய நடிகரின் படம் திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்த சூழலில், தனது அறிமுகப் படம் கவனிக்கப்படாமல் போனது குறித்து அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
நகைச்சுவை
அந்த 13வது ஆள் நான்தான் - விக்னேஷ் சிவனின் நகைச்சுவை
விஜயின் துப்பாக்கி படத்தின் இடைவேளைக் காட்சியில், விஜய் எதிரிகள் 12 பேரைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவார். அந்தச் சீனைப் பற்றிப் பேசிய விக்னேஷ் சிவன், "துப்பாக்கி படத்தின் இடைவேளையில் விஜய் 12 பேரைக் கொல்வார். ஆனால் உண்மையில் அவர் சுட்டது 13 பேரை. அந்த 13வது ஆள் நான்தான்." என்று கலகலப்பாகக் கூறினார். அதாவது, துப்பாக்கி படத்தின் வெற்றியானது தனது முதல் படத்தையும் அதன் மூலம் தனது திரையுலக ஆரம்பத்தையும் அப்படியே காலி செய்துவிட்டது என்பதைத்தான் அவர் அப்படி உருவகப்படுத்திக் கூறியுள்ளார். அந்தத் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த அவர், பின்னர் நானும் ரௌடிதான் படத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான இயக்குநராக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
எல்ஐகே
வெற்றிப் பாதையை தொடருமா எல்ஐகே?
சிம்புவை வைத்துத் தொடங்கிய பயணம் இன்று பிரதீப் ரங்கநாதன் வரை வந்துள்ளது. நயன்தாராவுடனான திருமணம், உயிர் மற்றும் உலகம் என இரண்டு மகன்கள் எனத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் விக்னேஷ் சிவன், தற்போது எல்ஐகே படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறார். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள எல்ஐகே திரைப்படம், விக்னேஷ் சிவனின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.