விடுதலை-2 திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் டீ-ஏஜிங் தொழில்நுட்பம்
'விடுதலை-2' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியார் ஆகியோரை இளமையாக காட்ட, டீ ஏஜிங் (De-Aging) தொழில்நுட்பத்தை இயக்குனர் வெற்றிமாறன் பயன்படுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாகவும், கதாநாயகியாக பவானிஸ்ரீயும், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜிவ் மேனன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருந்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பை பெற்றாலும், திரையரங்குகளில் படம் நல்ல வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை மலைப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தள்ளிப் போகும் விடுதலை-2 வெளியீடு?
இரண்டாம் பாகத்தில் 1960 காலகட்டத்தில் நகரும் திரைக்கதையில், கணவன் மனைவியாக விஜய் சேதுபதியும், மஞ்சு வாரியரும் நடிக்கின்றனர். இவர்களை இளமையாக காட்ட, டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் வெற்றிமாறன் பயன்படுத்த உள்ளார். இதற்கான செயல்முறையை, விஜய் சேதுபதியும் மஞ்சுவாரியரும் மேற்கொண்டு வருகின்றனர். படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் குறிப்பிட்ட அளவிலான படப்பிடிப்பு எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாதியில் கதை சூரியை சுற்றி நடந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் கதை விஜய் சேதுபதியை பற்றியதாகும். இதனால், விடுதலை-2 திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.