விடுதலை படத்தின் OTT தேதி வெளியானது!
நடிகர் சூரி, ஹீரோவாக ப்ரொமோட் ஆகி ஹிட் ஆன திரைப்படம், 'விடுதலை'. பொதுமக்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்கள் பலரும், படத்தை பற்றி புகழ்ந்து வந்தனர். படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் ஏராளமாக கிடைத்தது. இயற்கை பின்னணியில், ஒரு அழுத்தமான கதை தேர்வு செய்ததற்கு பலரும் இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டினர். ஆனால், இந்த படம் A சான்றிதழ் பெற்றிருந்ததால், பலரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து காண முடியாத சூழ்நிலை உருவானது. இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 28, ஜீ 5-இல் இந்த படம் வெளியாகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் OTT பதிவில், 20 நிமிடம் எக்ஸ்ட்ரா காட்சிகள் உள்ளது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் விடுதலை
'அசுரன்' படத்திற்கு பிறகு, வெற்றிமாறன் நீண்ட இடைவேளைக்கு பிறகு எடுத்த திரைப்படம் இந்த 'விடுதலை'. இந்த படத்தை முடிவு செய்யும் முன்னரே, நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்குவது என்று முடிவெடித்திருந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக கொரோனா லாக்டவுன் வரவே, படத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தது. மூன்று கதைகள் மாறி, இறுதியாக இந்த கதையை தேர்வு செய்தாராம் வெற்றிமாறன். இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையின் தழுவல் எனக்கூறுகிறார்கள். இந்த விடுதலை படத்தின் இரண்டாம் பாகம், இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில், விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், ராஜிவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.