பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகர் போண்டா மணி, சிறுநீரக செயலிழப்பால் நேற்று இரவு 11 மணி அளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 60. அண்மைக்காலமாகவே சிறுநீரக பிரச்சனைக்கு மணி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போண்டா மணியின் உடல் சென்னை பொழிச்சலூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் மரணம், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நகைச்சுவை நடிகராக 250க்கும் மேற்பட்ட படங்களில் கலக்கிய மணி
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட போண்டா மணி தமிழ்நாட்டுக்கு குடி பெயர்ந்த பின், 1991ல் இயக்குனர் பாக்கியராஜின் பவுனு பவுனுதான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சிறு சிறு வேடங்களில் திரைப்படங்களில் நடித்து வந்த மணிக்கு, வடிவேலு மற்றும் விவேக்குடன் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் கை கொடுத்தன. வடிவேலு உடன் வசீகரா, சச்சின், வின்னர், கண்ணும் கண்ணும், சுந்தரா ட்ராவல்ஸ் உள்ளிட்ட படங்களும், விவேக்குடன் படிக்காதவன், ரன், தென்காசி பட்டணம், மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் அவரது நடிப்பு பேசும்படியாக அமைந்தது. தற்போது வரை 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட சிறுநீரகப் பிரச்சனைக்கு பின்னர், சினிமாவில் சுறுசுறுப்பாக நடிக்கவில்லை.