தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையே நடைபெற்று வந்த மோதல், தற்போது பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் சமீபத்திய பேட்டிக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன் தொடங்கி, இயக்குனர் இமயம் பாரதிராஜா வரை, பலரும் ஞானவேல் பேசியது தவறு என்று கூறியுள்ளனர். இது பற்றி நேற்று இரவு பாரதிராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "திரு.ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே.. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும்" எனத்தெரிவித்துள்ளார்.
பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பது தான் சரி என பாரதிராஜா கருத்து
"உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு.அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிடவேண்டாம். 'பருத்திவீரன்' திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி அதில் ஒன்றை தயாரித்து உள்ளார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்". "ஏனெனில் உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக் கொண்டுதான் இருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மிகச்சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும் அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சனையை சமூகமாக பேசி தீர்ப்பது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என பாரதிராஜா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.