LOADING...
"ஷாருக்கானுக்கு எந்த அளவுகோலில் தேசிய விருது தரப்பட்டது?": தேசிய விருது தேர்வுகள் குறித்து நடிகை ஊர்வசி காட்டம்
மூத்த நடிகை ஊர்வசி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

"ஷாருக்கானுக்கு எந்த அளவுகோலில் தேசிய விருது தரப்பட்டது?": தேசிய விருது தேர்வுகள் குறித்து நடிகை ஊர்வசி காட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2025
10:10 am

செய்தி முன்னோட்டம்

71வது தேசிய திரைப்பட விருதுகளின் முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை தூண்டியுள்ளன. முக்கியமாக, மலையாள இயக்குநர் பிளெஸ்ஸியின் 'ஆடுஜீவிதம்' திரைப்படம் எந்தவொரு விருதுகளுக்கும் தேர்வாகாதது குறித்து, மூத்த நடிகை ஊர்வசி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தி நியூஸ் மினிட்டிற்கு அவர் வழங்கிய பேட்டியில் கூறியதாவது: "அவர்கள் எப்படி 'ஆடுஜீவிதம்' படத்தைப் புறக்கணிக்க முடியும்? நஜீப்பின் கதையை உடல், மனம், நேரம் அனைத்தையும் ஈடுபடுத்தி நடித்த நடிகரை அவர்கள் அங்கீகரிக்கவே இல்லை. அது 'எம்புரான்' படத்திற்காகத்தான் என நமக்கு தெரியும். விருதுகள் அரசியல் விளைவுகளால் இல்லை, திறமையைப் பார்த்து வழங்கப்பட வேண்டும்." என்றார்.

பின்கதை 

எம்பூரான் திரைப்படம் குஜராத் கலவரத்தை லேசாக தொட்டு சென்றது

பிரித்விராஜ் இயக்கிய 'எம்பூரான்' திரைப்படத்தில், குஜராத் மத கலவரம் பற்றியும், ரயில் எரிப்பு சம்பவம் பற்றியும் லேசாக தொட்டு சென்றது. அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதன் பின்னர் படக்குழுவினரும், நடிகர் மோகன்லால் தரப்பும் பொது மன்னிப்பு கேட்டனர். படத்தில் அந்த காட்சிகள் நீக்கப்படும், ம்யூட் செய்யப்பட்டும் மறு வெளியீடு செய்யப்பட்டது. எனினும், அதன் பின்னர் அமலாக்கத்துறை ரெய்டுகளும் நடந்தன. இவையனைத்தும் அந்த படத்தை குறி வைத்தே நடத்தப்பட்டது என கேரளா சினிமா துறையில் பரவலாக பேசப்பட்டது. தற்போது ஆடுஜீவிதம் படம், தேசிய விருதுக்கு பரிசீலிக்கப்படாததும் அதனால் இருக்கும் என ஊர்வசி கூறியுள்ளார்.

கூற்று

தேசிய விருது பற்றி ஊர்வசியின் விமர்சனம் 

'உள்ளொழுக்கு' திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ள ஊர்வசி, முன்னணி கதாபாத்திரங்களை துணை வேடங்களாக வகைப்படுத்தியதைக் கடுமையாக விமர்சித்தார். "நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன். ஆனால், இப்போது பேச வேண்டியது எனக்காக இல்லை — என் பின்னால் வரும் உண்மையான இளம் கலைஞர்களுக்காக. அவர்கள் ஏன் உண்மையான அங்கீகாரம் பெறக் கூடாது?" என்று கேள்வி எழுப்பினார். அதோடு, விஜயராகவன் 'பூக்களம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய போதும், அவரது வேடம் 'துணை' என வகைப்படுத்தப்பட்டதை ஊர்வசி விமர்சித்தார். "அவர் ஒரு மூத்த நடிகர். நிஜமான நிபுணத்துவம் கொண்டவர். ஏன் ஸ்பெஷல் மென்ஷனில் கூட அவர் இடம் பெறவில்லை?"

ஷாருக்கான்

ஷாருக்கான் 'ஜவான்' படத்திற்காக சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டதிலும் கேள்வி

அதோடு ஊர்வசி, ஷாருக்கானுக்கு 'ஜவான்' படத்திற்காக சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்தும் கேள்விகள் எழுப்பினார். "அந்த முடிவுக்கு என்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன?" என கேட்டார். தென்னிந்திய சினிமாவின் திறமைகளை புறக்கணிக்க கூடாது என வலியுறுத்திய ஊர்வசி, "தெற்கின் திறமையான நடிகர்கள் இப்போது பேசவில்லை என்றால், அங்கீகாரம் என்பது எப்போதும் பறிக்கப்பட்டே ஆகும்" எனக்கூறினார். மேலும், "தேசிய விருதுகள் திறமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். அரசியல், பிராந்திய சார்பு, பிரபலம் எல்லாம் காரணமாக இருக்கக்கூடாது," என்றார். 2018ஆம் ஆண்டில் ஃபஹத் ஃபாசிலும் பார்வதி திருவோத்துவும் தேசிய விருதுகளை ஏற்க மறுத்த நிகழ்வை அவர் பாராட்டினார். "அவர்கள் எடுத்த நிலைப்பாடு நம்பிக்கையை வளர்த்தது. அந்த மாதிரியான நியாய உணர்வே இப்போது தேவை." என்றார்.