பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்: அவரது படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டதை அறிவீர்களா?
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் திரையுலகின் ஜாம்பவானும், 'ஹீ-மேன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான நடிகர் தர்மேந்திரா, தனது 89-வது வயதில் இன்று மும்பையில் காலமானார். இந்த பழம்பெரும் நடிகரின் மறைவு, இந்தி சினிமா வரலாற்றில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவரது மறைவு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் IANS செய்தியின் படி, இன்று காலை அவர் உயிரிழந்ததாகவும், அதற்காக அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள அமிதாப் பச்சன், அமீர்கான் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பவன் ஹான்ஸ் மயானத்தில் குவிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு பிரகாஷ் கவுர் மற்றும் நடிகை ஹேமா மாலினி என இரண்டு மனைவிகளும், மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் மகள்கள் இஷா தியோல், அஹானா தியோல் ஆகியோரும் உள்ளனர்.
சினிமா பயணம்
தர்மேந்திராவின் சினிமா பயணம்
பஞ்சாபில் 1935-ஆம் ஆண்டு தர்மேந்திரா கேவல் கிருஷ்ணாகவாக பிறந்த இவர், 1960-களின் முற்பகுதியில் திரையுலகில் அறிமுகமாகி, தனது வசீகரம், கவர்ச்சியான தோற்றம் மற்றும் பன்முகத் திறமையால் விரைவாகப் புகழ்பெற்றார். காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என அனைத்து விதமான வேடங்களிலும் சரளமாக நடித்து, தனது தலைமுறையின் மிகவும் போற்றப்பட்ட நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 'ஷோலே' படத்தில் அவர் ஏற்ற வீரு என்ற கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இது தவிர, 'ஃபூல் அவுர் பத்தர்', 'யாதோன் கி பாராத்', மற்றும் 'சீதா அவுர் கீதா' போன்ற திரைப்படங்களில் அவரது சக்திவாய்ந்த நடிப்புகள் பிரபலம். 'பாலிவுட்டின் ஹீ-மேன்' என்று அழைக்கப்பட்ட அவர், திரைக்கு வெளியே கருணைமிக்கவராகவும் அன்பானவராகவும் அறியப்பட்டார்.
தமிழ் சினிமா
தர்மேந்திராவின் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன
சமீபத்தில் காலமான பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, இந்தித் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்தாலும், அவரது படங்கள் பல தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றுள்ளன. அதுபோல, அவர் பல தமிழ்ப் படங்களின் இந்தி மறு ஆக்கங்களிலும் நடித்துள்ளார். ஃபூல் அவுர் பத்தர்- ஒளி விளக்கு- MGR நடிப்பில் வெளியானது. சீதா அவுர் கீதா- வாணி ராணி- வானிஸ்ரீ மற்றும் முத்துராமன் நடித்தனர். ராஜ்புட்- ராஜவம்சம் என்ற பெயரில் விஜயகாந்த் நடித்தார். அதேபோல, ஒரே வழி, குமுதம், காவல்காரன் மற்றும் கல்யாணராமன் ஆகிய படங்களின் மறுஆக்கத்தில் அவர் நடித்தார். குறிப்பாக, தர்மேந்திரா நடித்த 'ரக்வாலா'(Rakhwala) திரைப்படம், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'காவல்காரன்'-இன் மறு ஆக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.