'பேட்மேன் பிகின்ஸ்' மற்றும் 'ரஷ் ஹவர்' நடிகர் டாம் வில்கின்சன் காலமானார்
இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவரும், தி ஃபுல் மான்டி திரைப்படத்தில் நடித்தவருமான ஹாலிவுட் நடிகர் டாம் வில்கின்சன் சனிக்கிழமை திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 75. அவரின் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினர் சார்பில், அவரது முகவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "டாம் வில்கின்சன் டிசம்பர் 30ல் திடீரென அவரது வீட்டில் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்திருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவருடன் இருந்தனர்" என அந்த முகவர் தெரிவித்தார். 2001 ஆம் ஆண்டு வெளியான இன் தி பெட்ரூம் மற்றும் மைக்கேல் கிளேட்டன்(2007) ஆகிய திரைப்படங்களுக்காக, இவர் அகடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்கி சானின் ரஷ் ஹவர் திரைப்படங்களுக்காக புகழ்பெற்றவர்
1948ல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் கவுண்டியில் பிறந்த வில்கின்சன், அவரது வாழ்வின் சில நாட்களை கனடாவில் கழித்தார். அவர் 1970களில் ராயல் அகாடமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்டில் பயின்றார். ஜாக்கி சானின் புகழ்பெற்ற ஆக்சன் காமெடி திரைப்படமான ரஷ் ஹவர் முதல் பேட்மேன் பிகின்ஸ் திரைப்படம் வரை, சில டஜன் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். வில்கின்சனின் நாடக சேவையை பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம், கடந்த 2005ம் ஆண்டு இவரை 'ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர்' குழுவில் நியமித்தது. அமெரிக்காவின் இரண்டாம் அதிபர் ஜான் ஆடம்ஸ் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட, ஜான் ஆடம்ஸ் சீரியஸுக்காக கோல்டன் குளோப்(2009), எமி(2008) விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.