இனி ஓடிடி-யிலும் புகையிலை எச்சரிக்கை வாசகம் கட்டாயம்!
செய்தி முன்னோட்டம்
திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளிவதற்கு முன் தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும். அந்த தணிக்க சான்றிதழ் பெறுவதற்கு பல சட்டதிட்டங்கள் உண்டு.
புகைபிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ அமையப்பெற்றால், 'statutory warning', அதாவது, இவை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என்பது கட்டாய விதி. அதேபோல் இன்னும் சில வரைமுறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும்.ஆனால் தற்போது வரை, திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கை இல்லை. அதனால் அதில் வெளியாகும் பல படங்களில் இது போன்ற காட்சிகள் சகட்டுமேனிக்கு இடம் பிடித்தன. இதற்காக கண்டனங்கள் எழுந்த வண்ணமும் இருந்தது.
OTT Release Movies
ஓடிடி-யிலும் எச்சரிக்கை வாசகம் கட்டாயம்
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடந்து வந்தது.
இந்நிலையில் புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களின் விதிகளை திருத்தியமைத்து, இன்று (மே 31) மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஓடிடி தளங்களிலும் இனி வெளியாகும் படங்களில், எச்சரிக்கை வாசகங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், நடுவிலும், புகையிலை எதிர்ப்பு வாசகங்களை காண்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் வெள்ளை பின்னணியில், கருப்பு நிற எழுதுக்களில் 'புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்' அல்லது 'புகையிலை உயிரை கொல்லும்'என்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் திரைப்படங்களுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.