தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல்
தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோயம்புத்தூர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து, சொந்த காரணங்களுக்காக விலகுவதாக திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்பவும் என் சொந்த காரணங்களுக்காக நம் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்கிறேன்." "இதுகாறும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ஹீரோக்களுக்கு இடையே நடைபெறும் வசூல் போட்டிகளுக்கு எதிரான விமர்சனங்களை, திருப்பூர் சுப்பிரமணியம் தொடர்ந்து முன்வைத்து வந்தார். மேலும், தயாரிப்பாளர்கள் சொல்லும் அளவிற்கு, திரைப்படங்கள் வசூல் செய்வதில்லை எனவும் அவர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் சர்ச்சையில் சிக்கும் திருப்பூர் சுப்ரமணியம்
சமீபத்தில் தீபாவளிக்கு சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான டைகர் 3 திரைப்படத்திற்கு, சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும், திருப்பூரில் உள்ள தனது ஸ்ரீ சக்தி சினிமாஸில் அவர், டைகர் 3 படத்தை காலை 7 மணிக்கு திரையிட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதுதவிர சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்களுக்கு வெற்றி படமாக அமையவில்லை என அவர் கூறியிருந்தார். மேலும், லியோ திரைப்படத்தில் விநியோகஸ்தர்கள், அதிக ஷேர் தொகை கேட்டதாகவும் சுப்பிரமணியம் குற்றம்சாட்டியிருந்தார். லியோ தயாரிப்பாளரான லலித்குமார், சுப்பிரமணியத்திற்கு விநியோகஸ்த உரிமை வழங்காததால் படத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்வதாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.