
'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு வங்காள அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை!
செய்தி முன்னோட்டம்
அதா ஷர்மா நடித்த தி கேரளா ஸ்டோரி, மே 5 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
சுதிப்தோ சென் இயக்கிய இந்தப் படம், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இஸ்லாமிய அரசு அல்லது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் கூறுகிறது.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை பொதுத் திரையிட தடை விதித்து மேற்கு வங்க அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், திரைப்படம் திரையிடப்படுவதையும், திரைப்பட பார்வையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதி செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த திரைப்படம் வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The Kerala Story
தடைக்கே தடை
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதால், படத்தை பார்ப்பதற்கு தடையேதும் இல்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மாநிலங்கள் மேல்முறையீடு செய்ய முடியாது என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறினார்.
அதனை தொடர்ந்து, படத்தை தடை செய்த மேற்கு வங்க அரசின் உத்தரவை நிறுத்தி வைக்கலாம் என்று பெஞ்ச் முடிவெடுத்தது.
மேற்கு வங்கத்தில் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள், படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது என்ற முடிவை எதிர்த்தும், தயாரிப்பாளர் குர்பான் அலி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.