தளபதி விஜய் - எச்.வினோத்தின் ஜனநாயகன் ரீமேக் தானா? மௌனம் கலைத்த இயக்குநர்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள ஜனநாயகன் திரைப்படம், தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு, ரசிகர்கள் இரு படங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகளைக் கவனித்தனர். கதாநாயகன் ஒரு பெண்ணை ராணுவத்தில் சேர வற்புறுத்துவது, ஆனால் அவர் தயக்கம் காட்டுவது, வில்லன் அந்தப் பெண்ணைத் தாக்கும்போது, நாயகன் பொங்கி எழுந்து பழிவாங்கும் காட்சிகள், இரண்டு படங்களிலுமே அதிரடி ஆக்சன் மற்றும் மசாலா கூறுகள் அதிகமாக இருப்பது இதை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எச்.வினோத்
இயக்குநர் எச்.வினோத்தின் பதில்
இந்த சர்ச்சைகள் குறித்து ஒரு நேர்காணலில் பேசியபோது இயக்குநர் எச்.வினோத் மர்மமான பதிலையே அளித்துள்ளார். அவர் அந்த நேர்காணலில் இப்படம் ரீமேக் என்பதை உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. "இது ஒரு பக்கா தளபதி விஜய் படம். டிரெய்லரை மட்டும் வைத்து முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வர வேண்டாம்." என்று அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். கதையைத் தீர்மானிக்கப் படம் வெளியாகும் வரை பொறுத்திருக்குமாறு அவர் கூறியுள்ளார். 'பகவந்த் கேசரி' படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடியும் இது குறித்துப் பேசியுள்ளார். "ஜனநாயகன் வெளியான பிறகு மக்கள் இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துத் உண்மையை அறிந்துகொள்வார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.