'இந்த முறை ஏலியன்ஸோட': 'தமிழ்ப்படம் 3' படப்பிடிப்புத் தொடக்கம், மாஸ் போஸ்டர் ரிலீஸ்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் நையாண்டி திரைப்படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வரும் ஒரே கூட்டணி சி.எஸ். அமுதன் - மிர்ச்சி சிவா கூட்டணிதான். கடந்த 2010-இல் வெளியான 'தமிழ்ப்படம்' வணிக சினிமாக்களின் வழக்கமான பாணிகளை நையாண்டி செய்து பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகள் கழித்து 2018-இல் வெளியான 'தமிழ்ப்படம் 2', கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற ஹாலிவுட் தொடர்கள் வரை கலாய்த்து பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது மேலும் 8 ஆண்டுகள் கழித்து, இக்கூட்டணியின் 3-வது பாகமான 'தமிழ்ப்படம் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#TamizhPadam3 Shooting Starts Today!
— Y Not Studios (@StudiosYNot) November 5, 2026
Starring @actorshiva @AthulyaOfficial
Written & Directed by @csamudhan
Produced by @sash041075 & @chakdyn
A @studiosynot Production#TP3 #TamizhPadam @APIfilms pic.twitter.com/2OTjQsYgNk
மிர்ச்சி சிவா
'அகில உலக சூப்பர்ஸ்டார்' டூ 'இன்டர்கேலடிக் சூப்பர்ஸ்டார்'
படப்பிடிப்பு தொடக்கத்தை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ள முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை 'அகில உலக சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்பட்டு வந்த மிர்ச்சி சிவா, இந்த 3-ஆம் பாகத்தில் 'இன்டர்கேலடிக் சூப்பர்ஸ்டார்' எனப் பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ளார்.
போஸ்டரில் கோட்-சூட் அணிந்திருக்கும் சிவா, தனக்கு எதிரே நிற்கும் வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலத்தை நோக்கியபடி நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இப்பாகத்தில் ஏலியன்கள் மற்றும் அறிவியல் புனைகதை திரைப்படங்களின் கலாய்ப்புகள் பிரதானமாக இருக்கும் எனக் குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது.
விவரங்கள்
தயாரிப்பு & படக்குழு விவரங்கள்
முதல் இரண்டு பாகங்களை தயாரித்து மாபெரும் வெற்றி கண்ட YNOT Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் எஸ்.சஷிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோருடன் இணைந்து, AP International நிறுவனமும் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இயக்குனர் சி.எஸ். அமுதன் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'ரத்தம்' திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
நடிகர் சிவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'சுமோ' மற்றும் இயக்குனர் ராமின் 'பறந்து போ' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
'தமிழ்ப்படம் 3' திரைப்படத்தில் அதுல்யா கதாநாயகியாக நடித்துள்ளார். இணையவுள்ள பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.