Loading...
திரையரங்குகளில் தினசரி 6 காட்சிகள் திரையிட அனுமதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
திரையரங்குகளில் நாளொன்றுக்கு 6 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திரையரங்குகளில் தினசரி 6 காட்சிகள் திரையிட அனுமதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

எழுதியவர் Vasuki
Nov 03, 2026
07:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் நாளொன்றுக்கு ஆறு காட்சிகள் வரை திரையிட்டுக்கொள்ள தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் பிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேஷன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை விடுத்த தொடர் கோரிக்கைகளை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு தினமும் காலை 6.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2.30 மணி வரை இந்த 6 காட்சிகளைத் திரையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள்

விதிகளில் மாற்றம் மற்றும் வார இறுதி சலுகைகள்

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை விதிகளின்படி தினசரி நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாட்களுக்கும், விடுமுறை நாட்களிலும் ஐந்து காட்சிகளுக்கு அனுமதி வழங்கி நடைமுறையில் இருந்து வந்தது.

தற்போது இக்கோரிக்கையை முழுமையாகப் பரிசீலித்த அரசு, விதிகளில் திருத்தம் செய்ய உத்தேசித்து இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள், உள்ளூர் பண்டிகைகள் மற்றும் அரசுப் பொதுவிடுமுறை நாட்களிலும் அதிகபட்சமாக 6 காட்சிகள் வரை திரையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய சூழல்

திரையுலகினர் வரவேற்பு

அரசின் இந்த முடிவினால் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு ரசிகர்களின் கூட்டம் நெரிசலின்றி சமாளிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிகாலை மற்றும் நள்ளிரவு காட்சிகள் முறைப்படுத்தப்படுவதால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் வருவாய் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசு உடனடியாகத் தீர்வு கண்டு அரசாணை வெளியிட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT