LOADING...
தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு அதிக மதிப்பு: விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
கலைமாமணி விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தங்கத்தை விட கலைமாமணி விருதுக்கு அதிக மதிப்பு: விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2025
07:29 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை (அக்டோபர் 11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருது பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தனது உரையில், ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலையை விட, தமிழக அரசு வழங்கும் கலைமாமணி பட்டத்திற்குத் தான் அதிக மதிப்பு என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். திராவிட மாடல் அரசு முத்தமிழ்க் கலைஞர்களைப் போற்றும் அரசாக விளங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், கலைஞர்களின் நலனுக்காகத் தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

உதவித்தொகை

உதவித்தொகை உயர்வு

முக்கியமாக, நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நலிந்த நிலையில் உள்ள கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர, சுமார் 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10,000 வழங்கப்படுகிறது. பொங்கல் கலைவிழாவை முன்னிட்டு 38 மாவட்டங்களிலும் இசைச்சங்கமம் மற்றும் கலைச்சங்கமம் நிகழ்ச்சிகள் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,000க்கும் மேற்பட்டக் கலைஞர்கள் பயனடைந்துள்ளனர். கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.