அதிகாலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி: முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் திட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் தினசரி அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகள் உட்பட 6 காட்சிகளைத் திரையிட அனுமதி வழங்கியதற்காக, முதலமைச்சர் விஜய்க்குத் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டப் பாராட்டு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் மற்றும் நிர்வாகிகள், "அதிகாலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரியவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒப்புதல் அளித்த முதலமைச்சர் விஜய் மற்றும் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சருக்குப் பாராட்டு விழா நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அவரின் அனுமதி கிடைத்தவுடன் விழா நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.
உத்தரவு
தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி
தமிழக அரசின் புதிய உத்தரவின்படி, புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஏழு நாட்களுக்கு அதிகாலை 6 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை தினசரி 6 காட்சிகளைத் திரையிடத் திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்கள், உள்ளூர் திருவிழா நாட்கள் மற்றும் அரசுப் பொது விடுமுறை நாட்களிலும் இந்த 6 காட்சிகள் நடைமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி
தமிழ் சினிமா வணிகம் வலுப்பெறும்
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டு வந்ததால், பிற மாநில விமர்சனங்கள் தமிழக வசூலைப் பாதிப்பதாகத் தயாரிப்பாளர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அரசின் இந்த அதிரடி முடிவால் தமிழ் சினிமா வணிகம் மேலும் வலுப்பெறும் எனத் திரையுலகினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.