'கருப்பு' 3 வாரங்களில் ₹300 கோடி வசூல்; எடிட்டர் கலைவாணன் உடைத்த ஆர்யாவின் ரகசிய கேமியோ சஸ்பென்ஸ்
செய்தி முன்னோட்டம்
சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் வெளியாகி தியேட்டர்களில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படம், வெற்றிகரமாக 3 வாரங்களை நிறைவு செய்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் இதுவரை 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ள இத்திரைப்படம், வசூலில் இன்னும் சற்றும் தொய்வில்லாமல் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அநீதிக்கு எதிராகப் போராடும் ஒரு குடும்பத்திற்கு உதவ பூமிக்கு இறங்கி வரும் 'கருப்புசாமி' என்ற காவல் தெய்வக் கதாபாத்திரத்தில் சூர்யா அதிரடி காட்டியுள்ளார். இந்த ஆக்சன் டிராமா திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி வில்லனாகவும், இவர்களுடன் இந்திரன்ஸ், நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் சுப்ரீத் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
கேமியோ
படத்திலிருந்து நீக்கப்பட்ட ஆர்யாவின் மெகா கேமியோ ரகசியம்
'கருப்பு' திரைப்படம் தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தின் எடிட்டர் கலைவாணன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஒரு சுவாரசியமான ரகசியத்தை உடைத்துள்ளார். இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆர்யா ஒரு முக்கிய கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார் என்றும், ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "20 முதல் 30 வினாடிகள் மட்டுமே வரக்கூடிய சில சிறிய கேமியோ காட்சிகளை எடிட்டிங்கில் நீக்க வேண்டியிருந்தது. அதில் 'டாக்டர்' பட சகோதரர்களான ரகு ராம் மற்றும் ராஜீவ் லக்ஷ்மணன் நடித்த காட்சிகள், விஜய்யின் 'கோட்' திரைப்படம் தொடர்பான ஒரு ரெஃபரன்ஸ் காட்சி மற்றும் நடிகர் ஆர்யா சார் நடித்த காட்சிகள் அடங்கும்" என்று எடிட்டர் கலைவாணன் கூறியுள்ளார்.
காட்சி
நீக்கப்பட்ட காட்சி விரைவில் வெளியாகும்
நீக்கப்பட்ட காட்சிகளிலேயே ஆர்யா நடித்த காட்சி தான் மிகவும் நீளமானது என்றும், அந்த காட்சியைப் படக்குழுவினர் விரைவில் தனியாக 'டெலிட்டட் சீன்ஸ்' (Deleted Scenes) வீடியோவாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் எடிட்டர் கலைவாணன் கூடுதல் தகவலைப் பகிர்ந்துள்ளார். 'கருப்பு' திரைப்படத்தின் இந்த அசுரத்தனமான பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாகப் பிரம்மாண்ட பரிசுகளை வழங்கியுள்ளார். படத்தின் எடிட்டர் கலைவாணன், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு மற்றும் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் ஆகிய மூவருக்கும் தலா ஒரு புதிய மகிந்திரா BE6 ரக அதிநவீன எலக்ட்ரிக் கார்களை சூர்யா பரிசாக வழங்கி தனது மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளார்.