உயர்தர ஆடியோ வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா ஸ்பாட்டிஃபை?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்களுடைய மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையில் உயர்தர லாஸ்லெஸ் ஆடியோ (Lossless Audio) வசதியை அளிக்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஸ்பாட்டிஃபை.
உயர்தர லாஸ்லெஸ் ஆடியோ வசதியை தங்கள் தளத்தில் வழங்கவிருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தது ஸ்பாட்டிஃபை நிறுவனம். ஆனால், அதன் வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.
ஆப்பிள் மியூசிக் மற்றும் அமேசான் மியூசிக் ஆகிய தளங்கள் ஏற்கனவே இந்த வசதியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த உயர்தர ஆடியோ வசதியைப் பயன்படுத்த பயனர்கள் கூடுதல் கட்டணம் கொண்ட திட்டத்திற்கு சந்தா கட்டியிருக்க வேண்டும்.
தற்போது இந்த உயர்தர ஆடியோ சேவையுடன் கூடிய சந்தா திட்டத்தை அமெரிக்காவில் மட்டும் வழங்கி வருகிறது ஸ்பாட்டிஃபை நிறுவனம்.
ஸ்பாட்டிஃபை
உயர்தர லாஸ்லெஸ் ஆடியோ என்றால் என்ன?
பொதுவாக ஒரு ஆடியோ ஃபைலை கம்ப்ரஸ் செய்யும் போது, அதன் தரம் குறையும். ஆனால், தரம் குறையாமல் கம்ப்ரஸ் செய்யப்பட்டு அதனை தங்கள் சேவையில் வழங்குவதே உயர்தர லாஸ்லெஸ் ஆடியோ சேவையாகும்.
இதன் மூலம், மிகவும் தெளிவான ஆடியோ அனுபவத்தை நாம் பெற முடியும். ஆனால், இந்த லாஸ்லெஸ் ஆடியோவை சேமித்து வைக்கவும், ஸ்ட்ரீம் செய்யவும் அதிக இடமும் டேட்டாவும் தேவைப்படும்.
இந்த லாஸ்லெஸ் ஆடியோ வசதியை இந்தியாவில் ரூ.99-க்கு வழங்கி வருகிறது ஆப்பிள் மியூசிக். இந்தியாவில் ஸ்பாட்டிஃபை சேவையின் சாதாரண மாத சந்தாவே ரூ.119-ஆக இருக்கிறது.
மேலும், அமெரிக்காவில் 9.99 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 820 ரூபாய்) இந்த லாஸ்லெஸ் ஆடியோ வசதியை ஸ்பாட்டிஃபை நிறுவனம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.