பூட்டிய வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட சௌகார் ஜானகியின் மகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பூட்டிய வீட்டிற்குள் சக்கர நாற்காலியிலிருந்து தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மகள் யக்னபிரபாவை (76), கதவை உடைத்து தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். OMR சாலை துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பில் யக்னபிரபா தனியாக வசித்து வருகிறார். இவரது பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், வீட்டில் தனியாக இருந்த போது இந்த எதிர்பாராத விபத்து நேர்ந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலைதடுமாறிய தருணம்
காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனியாக வசித்துள்ளார்
சமீபத்தில் காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக யக்னபிரபாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால் இயல்பாக நடக்க முடியாத அவர், நடமாட்டத்திற்கு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை கழிவறைக்குச் செல்ல முயன்றபோது சக்கர நாற்காலியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த அவரால் மீண்டும் எழுந்து சக்கர நாற்காலியில் அமரவோ அல்லது பூட்டப்பட்ட வீட்டின் கதவைத் திறந்து உதவி கேட்கவோ இயலவில்லை.
செய்வதறியாது தவித்த அவர், அருகிலிருந்த செல்போன் மூலம் தனது உறவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
முதலுதவி
கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்
உறவினர் அளித்த தகவலின் பேரில், துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த வீரர்கள், கீழே விழுந்து தவித்துக் கொண்டிருந்த யக்னபிரபாவை மீட்டனர்.
தொடர்ந்து அவரது குடும்ப மருத்துவரை வரவழைத்து அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளும் உடனடியாக வழங்கப்பட்டன.
'அண்ணாமலை', 'நாட்டாமை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை வைஷ்ணவி இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.