கே-டிராமா புகழ் நடிகை கிம் சே-ரான் 24 வயதில் தற்கொலை; திரையுலகினர் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
தென் கொரியாவைச் சேர்ந்தவரும் கே-டிராமா மூலம் புகழ்பெற்ற நடிகையான கிம் சே-ரான் 24 வயதில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக திங்களன்று (பிப்ரவரி 17) அந்நாட்டு காவல்துறை உறுதிப்படுத்தியது. இருப்பினும் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், சியோலின் சியோங்டாங்-குவில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
காவல்துறையினர் தவறான விஷயங்களை நிராகரித்துள்ளனர். மேலும், அவரது குடியிருப்பில் திருட்டுக்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை.
அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நடிப்பு
கிம் சே-ரான் நடிப்பு பின்னணி
பிளட்ஹௌண்ட்ஸ் என்ற நெட்ஃபிக்ஸ் தொடரில் நடித்ததற்காக அறியப்பட்ட கிம் சே-ரான், குழந்தை நட்சத்திரமாக இருந்து முன்னணி நடிகையாக முன்னேறியுள்ளார்.
கே-டிராமாக்களான தி மேன் ஃப்ரம் நோவேர் மற்றும் ஹை ஸ்கூல் லவ் ஆன் ஆகியவை அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.
எனினும், 2022 இல் குடித்துவிட்டு வண்டி ஒட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு நடிப்பு வாய்ப்புகள் மிகவும் குறைந்தன.
மேலும், அந்த விபத்திற்கு இழப்பீடு வழங்குவதற்காக அவர் ஒரு ஹோட்டலில் பகுதிநேரமாக வேலை செய்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரிய சினிமா மற்றும் தொலைக்காட்சியில் குறிப்பிடத்தக்க திறமையுடன் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்த கிம் சே-ரான் மறைவு ரசிகர்களையும், அந்நாட்டு சினிமா துறையையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.