'அரசன்' படம் வெளியீடு குறித்து சிம்பு கூறியது இதுதான்: இயக்குனர் வெற்றிமாறன் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் செய்தி
செய்தி முன்னோட்டம்
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதுவரை ஆறு திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், தனது ஒவ்வொரு படைப்பாலும் இந்திய சினிமா உலகிலும் ரசிகர்களிடமும் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற 'ஆடுகளம்' திரைப்படம், ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளி வெற்றிமாறனை தவிர்க்க முடியாத இயக்குநராக மாற்றியது.
வெற்றி
வடசென்னை விமர்சனங்களும் தொடர்ந்து பட வெற்றிகளும்
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த போதிலும், அப்பகுதி மக்களை அவர் சித்தரித்த விதம் குறித்து ஒருதரப்பினரிடையே விமர்சனங்கள் எழுந்தன.
இருப்பினும், ரசிகர்களின் பெரும் ஆதரவால் அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான 'விடுதலை 2' திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
அரசன்
சிம்புவின் 'அரசன்' திரைப்பட நிலவரம்
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகிவிட்டார் என்று பரவிய வதந்திகளைப் படக்குழுவினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
மேலும், இத்திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைக்கும் என்று தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரிலீஸ்
ரிலீஸ் தேதி மற்றும் தீபாவளி சர்ப்ரைஸ் குறித்து சிம்பு விளக்கம்
இன்று இயக்குநர் வெற்றிமாறனின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சிம்பு படம் குறித்து பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் பேசிய சிம்பு, 'அரசன்' திரைப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள விரும்பாததால் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 'The World Of Arasan' என்ற சிறப்பு க்ளிம்ப்ஸ் வீடியோ வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியிடப்படும் என்று சிம்பு உறுதி அளித்துள்ளார்.