திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' அவலம்; தானும் சந்திக்க நேர்ந்ததாக நயன்தாரா குற்றச்சாட்டு
'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தென்னிந்தியாவின் திரைபடவுலகில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார். ஆனால், அவரும் 'காஸ்டிங் கவுச்' அவலத்தை சந்திக்க நேர்ந்தது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது, அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 'காஸ்டிங் கவுச்' என்பது, படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பிற்கு கைமாறாக கேட்கப்படும் சில 'சமரசங்கள்'. இது குறித்து பேசியுள்ள நயன்தாரா, தனது ஆரம்ப காலத்தில், தன்னையும் ஒரு பெரிய படத்தில் நடிப்பதற்காக சிலர் அணுகியதாகவும், அதற்கு கைமாறாக சில 'அனுகூலங்கள்' கேட்கப்பட்டதாகும் கூறியுள்ளார். ஆனால், அந்த பட வாய்ப்பினை தான் மறுத்துவிட்டதாகவும், தன்னுடைய திறமையின் மேல் தனக்கு நம்பிக்கை இருந்ததால், அதை கொண்டு தனது சினிமா வாழ்க்கையை உருவாக்கி கொள்வதாக கூறிவிட்டதாகவும், அவர் அந்த பேட்டியில் மேலும் தெரிவித்தார்.
தென்னிந்திய திரைப்படவுலகில் நிலவும் 'காஸ்டிங் கவுச்' அவலம்
இது போன்ற 'காஸ்டிங் கவுச்' குற்றச்சாட்டுகள் இதற்கு முன்னரும் சிலர் தெரிவித்துள்ளனர். 'பாகுபலி பட நாயகி அனுஷ்கா ஷெட்டியும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போல ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். துணை நடிகையான ஷாலு ஷம்மு, தனக்கு இது போல பல தடவை நடந்ததாகவும், அதனால் தான் திரைப்படங்களில், தான் கதாநாயகி வேடம் வேண்டாமென கூறிவிட்டதாகவும் கூறியிருந்தார். நடிகை சமீரா ரெட்டி, தன்னிடம் ஒரு ஹீரோ வெளிப்படையாக இது பற்றி பேசியதாகவும், அதன் பின்னர் அவருடன் தான் நடிக்கவில்லை எனவும் கூறினார். நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில், தன்னுடைய சக திரையுலக நடிகைகள் இதுபோல அவலங்களை சந்திக்க நேர்ந்ததை தாம் அறிவதாகவும், ஆனால், தன்னிடம் யாரும், இதுவரை அப்படி அணுகியதில்லை என்றும் கூறியிருந்தார்.