அஜித்தின் 'டேர்டெவில்' படத்தில் வில்லனாக இணைந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான 'டேர்டெவில்' படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய வில்லனாக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 'ஜெயிலர்' படத்தில் நரசிம்மா கதாபாத்திரத்தில் மிரட்டிய சிவராஜ்குமார், தற்போது அஜித்குமாருக்கு வில்லனாக நடிக்கவிருப்பது தென்னிந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்கதை
அஜித் - சிவராஜ்குமார் கூட்டணி உருவானது எப்படி?
இந்த படத்தில் சிவராஜ்குமார் இணைந்ததன் பின்னணி குறித்து சுரேஷ் சந்திரா கூறுகையில்,"படத்தில் மிகவும் சக்திவாய்ந்த வில்லன் கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அதற்காகப் பல நடிகர்களின் பெயர்களை நாங்கள் ஆலோசித்து வந்தோம். அஜித் சாருக்கு சிவராஜ்குமார் சார் மீது மிகுந்த மரியாதை உண்டு; எனவே அவரை அணுக முடிவு செய்தோம்."
"மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சென்று சிவண்ணாவிடம் கதை சொன்னார்; அவரும் உடனடியாகச் சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அஜித் சாரே சிவராஜ்குமார் சாரிடம் நேரடியாகப் பேசினார். நவம்பர் 17 அல்லது 18-ஆம் தேதி அவர் படப்பிடிப்பில் இணைகிறார்" என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு
ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பான படப்பிடிப்பு
தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 'டேர்டெவில்' படத்தின் முக்கியக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிவராஜ்குமாருடன் ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன், சுனில், பிரபு, பார்த்திபன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தற்போது அஜித்குமார், பிரபு, பார்த்திபன் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் பங்கேற்கும் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் 17-ஆம் தேதி முதல் சிவராஜ்குமார் ஹைதராபாத் படப்பிடிப்பில் இணையவுள்ள நிலையில், தற்போதைய படப்பிடிப்பு அட்டவணை டிசம்பர் 20-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.