கோவையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு
நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாள் நாளை(ஜூன்.,22) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நடிகர் விஜய்யின் பெயரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். இதனிடையே கோவை மாவட்டத்தில் அவரது ரசிகர் மன்றத்தினர் சர்ச்சையினை ஏற்படுத்தும் வகையிலான சுவரொட்டிகளை பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டியில், "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" என்னும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையினை குறிப்பிடும் வகையிலான வாசகங்களை கொண்ட சுவரொட்டியால் தற்போது கோவையில் பல பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது. சமீப காலங்களாக விஜய் ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, நலத்திட்டங்களுக்கு உதவி வழங்குதல் போன்ற அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
விஜய் உரை குறித்து அரசியல் கட்சியினரும் விமர்சனம்
சமீபத்தில் நடிகர் விஜய் அவர்கள் சென்னை நீலாங்கரை பகுதியில் 234 தொகுதி வாரியாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை அழைத்து பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை அறிவுரையாக கூறினார். அதில் ஒன்றாக, பெற்றோர் மற்றும் மாணவர்கள் பணத்தினை வாங்கி கொண்டு ஓட்டளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். விஜய் பேசிய இது போன்ற கருத்துக்களில் அரசியல் சாயல் இருந்ததாக ஓர் கருத்து தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சியினரும் இந்த நிகழ்வு குறித்து விமர்சித்து வருகிறார்கள்.