சதய விழா 2024 ஸ்பெஷல்: பொன்னியின் செல்வனை திரைப்படமாக முயற்சித்தவர்கள் யார் தெரியுமா?
முதலாம் ராஜராஜ சோழன் என்றும் அழைக்கப்படும் ராஜராஜ சோழன், தென்னிந்தியாவில் சோழ வம்சத்தின் ஒரு முக்கிய மன்னராக இருந்தார். இவர் கி.பி., 985 முதல் 1014 வரை ஆட்சி செய்தார். ஆண்டுதோறும் அவரின் பிறந்தநாளான ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் சதய விழாவாக இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் 10 அன்று தொடங்குகிறது. கலை, கட்டிடக்கலை, ஆட்சி மற்றும் ராணுவ வெற்றிகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காரணமாக அவரது ஆட்சி, சோழப் பேரரசின் பொற்காலம் என்று புகழப்படுகிறது. அவரது மரபு இந்திய வரலாற்றில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றது. அவரின் புகழை பேசும் கற்பனை மற்றும் சரித்திரம் கலந்த நாவல் தான் பிரபல நாவலாசிரியர் கல்கி எழுதியது.
பொன்னியின் செல்வனை பாடமாக்க முயற்சித்தவர்கள் யார்?
வரலாற்றுப் புனைகதையின் பாத்திரமான பொன்னியின் செல்வனின் கதைக்கு எப்போதும் வழிபாட்டு ஆதரவாளர்கள் உள்ளனர். 2,000 பக்க மகத்தான நாவலின் திரைப்படத் தழுவல் என்பது பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் கனவாக இருந்தது. அரை நூற்றாண்டுக்கு முன்பே, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர், இந்த புதினத்தை படமாக்க முயற்சித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜராஜ சோழன் என்ற ஒரு மாபெரும் வீரனின் அற்புதமான கதையை, பெரிய திரையில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த நேரத்தில் அதன் பட்ஜெட் தட்டுப்பாடுகள் காரணமாக நிறைவேறவில்லை. அதன் பின்னர் பொன்னியின் செல்வனின் நாவலின் காப்புரிமை கமல்ஹாசன் பெற்றார். ஆனால் அவராலும் இப்படத்தை படமாக முடியவில்லை.
மேடை நாடகமாக அரங்கேறிய பொன்னியின் செல்வன்
திரைப்படமாக உருவாக்க ஏற்படும் தயாரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு, ஒரு சில மேடை நாடகங்கள் அவற்றை நாடகமாக்கி நடிக்க துவங்கினர். அப்படி மாஜிக் லன்டர்ன் நிறுவனம் இயக்கிய பொன்னியின் செல்வன் மேடை நாடகம் மாபெரும் வெற்றி பெற்றது. பல காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது. அந்த நாடகத்திற்கு திரைக்கதை எழுதியவர் பிரபல நடிகர் இளங்கோ குமரவேல். கச்சிதமான காட்சியமைப்பு, சுருக்கமாக எழுதப்பட்ட கூர்மையான வசனங்கள், இந்த நாவலின் சாராம்சம் குறையாமல் நடிக்க உதவியது. அதனால், அடுத்தகட்டமான இயக்குனர் மணிரத்னம் இந்த கதையை படமாக்க முயற்சித்த போது குமரவேலை உடன் வைத்துக்கொண்டார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்
இறுதியாக, லைகா நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் இருவரும் இணைந்து கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டில் இரு பாகங்களாக வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில், தலைமை கதாபத்திரமான பொன்னியின் செல்வன் பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். கச்சிதமாக கம்பீரமான பொன்னியின் செல்வனாகவும், தீரம் பொருந்திய சோழ இளவரசராகவும் அவர் நடித்திருந்தார். பொன்னியின் செல்வனின் அண்ணனான கரிகால சோழன் கதாபத்திரத்தில் விக்ரமும், புனைவு கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்திருந்தனர். இந்த இரு சோழ இளவரசர்கள் சகோதரியாக குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் 2 பாகங்களும் அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.