சமந்தா சினிமாவில் நீடிப்பதற்காக 'மலிவான' செயல்களில் ஈடுபடுகிறார்: தயாரிப்பாளர் சிட்டிபாபு
"நடிகை சமந்தா ரூத் பிரபுவின் சினிமா வாழ்க்கை முடிந்தது", என தெலுங்கு படவுலகில் மூத்த தயாரிப்பாளர் சிட்டிபாபு ஒரு பேட்டியில் கூறியுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சாகுந்தலம். இந்த படத்திற்காக சமந்தா கிட்டத்தட்ட அனைத்து ஊர்களுக்கும் சென்று ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டார் எனதான் கூறவேண்டும். ஆனால், இவ்வளவு செலவழித்து, படம் எதிர்பார்த்த வெற்றியையும், லாபத்தையும் அடைந்ததா என்றால், அது கேள்விக்குறி தான். சாகுந்தலம் வெளியான முதல் நாளில் அனைத்து மொழிகளிலும் 5 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. 2வது நாளிலும் இன்னும் குறைந்து, 1.5 கோடி ரூபாய் வசூலித்தது. 3வது நாளில் கிட்டத்தட்ட ரூ 2 கோடி வசூல் செய்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.
சமந்தாவை பற்றி அவதூறாக பேசிய தயாரிப்பாளர்
இதனிடையே, ஒரு தனியார் ஊடகத்தின் நேர்காணலில் சிட்டிபாபு, சமந்தாவை பற்றி அவதூறாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. 'நட்சத்திர நாயகி' என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார். குறிப்பாக விவாகரத்திற்கு பின்னர்". "அதனால்தான், பணம் சம்பாதிக்கவேண்டி, தனக்கு வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஒத்துக்கொள்கிறார். அதில் ஒன்றுதான், 'புஷ்பா' படத்தில் அவர் ஆடிய ஐட்டம் டான்ஸ்" என்றார். அதோடு, "யசோதா படத்தின் ப்ரோமோஷன்களில், கண்ணீர் சிந்தி, படத்தை ஓட வைக்க முயன்றார். தற்போது சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனுக்கும் கிட்டத்தட்ட அதையே ஆயுதமாக பயன்படுத்தினார்" என பகீர் குற்றசாட்டை வைத்தார் சிட்டிபாபு. "ஒவ்வொரு முறையும் செண்டிமெண்ட் வேலை செய்யாது. இவை அனைத்தும் மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள்," என்று மேலும் தெரிவித்துள்ளார்.