திரையரங்குக்குள் பட்டாசு வெடிக்க, பாலபிஷேகம் செய்ய வேண்டாம்- சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த டைகர் 3 திரைப்படம், தீபாவளிக்கு வெளியான நிலையில் மகாராஷ்டிராவில் மாலேகான் பகுதியில் ரசிகர்கள் திரையரங்குக்குள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், இது குறித்து தனது சமீபத்திய நேர்காணலில் சல்மான் கான் பேசியுள்ளார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், திரையரங்குக்குள் பட்டாசு வெடிப்பது "நாட் கூல்" என தெரிவித்தவர், அதனால் ஏற்படும் சாத்தியமான ஆபத்துகள் குறித்தும் எச்சரித்தார். ரசிகர்கள் அவர் திரைப்படத்திற்கு ஆவலாக இருப்பதை ஒப்புக்கொண்டவர், திரையரங்குக்குள் பட்டாசு வெடிப்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்தார். மேலும், தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரத்தை, ரசிகர்கள் மேலும் மோசமாகாமல் இருக்க கேட்டுக் கொண்டார்.
பால் குடிப்பது, எனக்கு ஒவ்வாது- சல்மான் கான்
ரசிகர்கள் தனது பட போஸ்டர்களுக்கு பாலபிஷேகம் செய்வது குறித்து பேசிய சல்மான் கான், பட்டினியால் அவதிப்படும் குழந்தைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டுகோள் விடுத்தார். லாக்டோஸ் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ள சல்மான் கான், "நான் பால் குடித்தால், வயிறு பாதிக்கப்படும். என் போஸ்டர்களில் பால் ஊற்றினால், அவையும் கெட்டுவிடும்" என தெரிவித்தார். லாக்டோஸ் ஒவ்வாமை என்பது, பாலில் உள்ள லாக்டோசை, உடலால் ஜீரணிக்க முடியாமல் போகும்போது ஏற்படுகிறது. இது, பொதுவாக பெரும்பான்மையான மக்களிடம் காணப்படுவது. ஒரு ஆய்வின்படி உலகில் 65% மக்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.