ராமாயணம் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் பட அப்டேட்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அடுத்த முக்கிய அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்திய சினிமாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 18-ஆம் தேதி வெளியாகலாம் என்று நெட்டிசன்கள் மத்தியில் வதந்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன. படக்குழுவினர் இந்த தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், உலகப் புகழ்பெற்ற 'காமிக் கான்' திருவிழாவில் படம் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே இந்த வீடியோ வெளியாகும் என்று நம்பப்படுகிறது. நடப்பு ஜூலை மாத இறுதியில் (ஜூலை 22 முதல் ஜூலை 26 வரை) இந்த காமிக் கான் விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு
ரசிகர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு
X (முன்பு ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் மற்றும் ரெடிட் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தற்போதிலிருந்தே இந்த டிரெய்லர் ரிலீஸுக்கான கவுண்ட்டவுனைத் தொடங்கிவிட்டனர். இந்த புதிய வீடியோவில் பல சுவாரசிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரன்பீர் கபூரின் ராமர் தோற்றத்தின் கூடுதல் காட்சிகள், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியின் எழில்மிகு தோற்றம் மற்றும் கே.ஜி.எஃப் புகழ் நடிகர் யஷ் இராவணனாக நடிக்கும் மிரட்டலான காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவரங்கள்
படத்தை பற்றி மேலும் சில விவரங்கள்
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்கள் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். 8 முறை ஆஸ்கார் விருது வென்ற 'DNEG' நிறுவனம் இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ்(VFX) பணிகளைக் கவனித்து வருகிறது. 2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களின் IMDb பட்டியலில் முதலிடத்தில் உள்ள 'ராமாயணம்: பாகம் 1' வரும் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.